நம்மை திருட ...

உன்னை நானும்

என்னை நீயும்
சமரசமாய்
திருடிக்கொண்டோம் ..
அங்கே பார்
காதலும் நட்பும்
தமக்குள்
சண்டை இட்டுக்கொள்கின்றன
நம்மை திருட ...

முப்பத்திரெண்டு ப(தி)ல்லும் நானும் ...













இனிய நண்பர்களே ..
மீண்டும் ஒரு தொடர் பதிவு ..
நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வரமுடியாமல் இருந்த என்னை ..
என் தங்கையின் அன்பு கட்டளை இதோ இந்த தொடர் பதிவு ...
நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...

( ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப்பா பதில் சொன்னா ஒரு கேள்விக்கு ஒரு பல்லுன்னு ..
உடைப்பாங்களோ .. ...
ம்ம் ..விஷ்ணு ..எதுக்கும் ஜாக்ரதை ..
அடக்க ஒதுக்கமா பதிலா சொல்லிட்டு
போய்ட்டே இரு .. விவகாரமே வேண்டாம் ...)



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


எனக்கு நானே வைத்து கொண்ட பெயர் ..
எனக்கு மிக பிடித்த பெயரும் கூட ....
இந்த பெயர் எனக்கு பிடிக்க காரணம்
எனது மகனின் பகுதி பெயரையும்
எனது தந்தையின் பகுதி பெயரையும் இணைத்து
எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் ..
அதனால் தான் எனக்கு பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் ..

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

வெளிப்படையாக அழுதது குறைவு ..
சிறு வயதில் என்று கூட சொல்லலாம் ..
என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதது என்றால்
பத்தாம் வகுப்பு படிக்கையில் ..
எனது உடன் படித்த எனது நெருங்கிய தோழனின் மரணம் .. பஸ்
வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வருபவன் ..
தினமும் டிராக்டரில் வருவது வழக்கம் ..
அன்று டிரைவர் எத்தனை சொல்லியும் கேளாமல்
டிராக்டரில் இணைத்திருக்கும் பின் பெட்டி வண்டியில்
கடைசியில் சாய்ந்து அமர்ந்து படித்துக்கொண்டு வந்திருக்கிறான் ..
ஒரு பள்ளத்தில் எதிர் பாராமல் வண்டி குலுங்க ..
சாய்ந்திருந்த பின் பக்க தடுப்பு சரியாக
கொக்கி இணைக்கப்படாமல் இருந்ததால் திறந்துகொள்ள
இவன் பாண்ட் வண்டியின் கொக்கியில் மாட்டி
நீண்ட தூரம் இழுத்து வரப்பட்டிருக்கிறான் .. தலை தரையில் உரசியபடி ..
அவனது துரதிஷ்டம்
அன்று அவன் மட்டுமே பள்ளிக்கு வந்திருக்கிறான் ..
உடன் வரும் வேறு மாணவர்கள் எவரும் அன்று வரவில்லை ...
இவன் பின்னால் விழுந்ததை
முன்னால் இருக்கும் டிரைவர் கவனிக்க வில்லை ...
அவனை பார்க்க சென்று கட்டுப்படுத்த முடியாமல்
அழுதிருக்கிறேன் நிறையவே .....
அதிலிருந்து மீள மிக அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன்
இன்றும் மறக்காமல் நினைவில் இருக்கிறது ..அந்த காட்சி ...

அதன் பிறகு வெளிப்படையாக அழவே இல்லை எனலாம்
( தாய் தந்தையரின் மரணத்தின் போதும் )
உடன் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில்
நான் இருந்ததால்
அழுகையை என்னுள்ளே அடக்கி இருந்திருக்கிறேன் ....

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும் .. தமிழ் கையெழுத்து
மிக மிக பிடிக்கும் ..

4.பிடித்த மதிய உணவு என்ன?

சைவ உணவு சாதம் சாம்பார் மற்றும் காய்கறிகள் எதுவும் மிக பிடிக்கும் ..
கண்டிப்பாக மோர் அல்லது தயிர் வேண்டும் ..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அனைவரிடமும் பழகுவேன் நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி விட்டால் என்னை விட்டு விலக அவர்களை விடமாட்டேன் ..

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும் ..
அருவி என்றால் கொஞ்சம் அதிகமே ..
ஒரு வேளை அருவி குளியல் அடிக்கடி இல்லாததால்
அதை கொஞ்சம் அதிகம் பிடிக்கிறது என நினைக்கிறேன் ..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் கண்களை தான் .. ..
என் கண்களை பார்த்து பேசாதவர்களை என்னால் நம்ப முடிவதில்லை ..
( இப்படி ஒரு எண்ணம் மனதில் பதிந்து ..கிடக்கிறது ... .. )

நான் யாருடன் நேரில் பேசினாலும்
கண்களை மட்டுமே பார்த்து பேசுவதுண்டு ..
கொஞ்சம் நெருங்கி விட்டால்
அவர்கள் நடை உடை அனைத்தும் கவனிப்பேன் ..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம் நான் நானாகவே இன்றும் இருப்பது ..
பிடிக்காத விஷயம் என்றால் எளிதாக எவரையும் நம்பி விடுவது ...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னை விட என் மீது அன்பு வைத்திருப்பது ...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்படி நிரந்தரமான வருத்தம் எதுவும் இல்லை ..
அவ்வப்போது வீட்டு நினைவு வந்து விட்டால்
அவர்கள் அருகில் இல்லையே என
ஒரு வருத்தம் வாசல் தட்டிவிட்டு போகும் ..


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ரூமில் இருக்கிறேன் இரவு உடைகளாக
வெள்ளை டி .. ஷர்ட் + சாம்பல் கலர் பாண்ட்டும் அணிந்திருக்கிறேன் ..
ம்ம் ..இந்த ஷர்ட் என்ற உடன் நினைவு வருகிறது ...
எனது வலைதளத்தில்

உயிர் பெற மறுக்கின்றன
என் விடியல்கள்
உன்னை கனவில் கண்ட
இரவுகளால் ...


என்ற இந்த வரிகளை படித்து முதலில்
எனது ரசிகையாகி ..
பிறகு நல்ல தோழியானவர்
எனது பிறந்த நாள் பரிசாக
குவைத்திற்கு அவர்களின் நண்பர் மூலம்
இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தது ...
எனது தோழிகளில் என்றும் முன் வரிசையில் இருக்கிறார் ..

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிட்டரை தான் பார்க்கிறேன் ...
மெல்லியசையாக மலையாள பாடல் பின்னணியில் போகிறது ...
கேட்க நினைப்பவர்கள் இணைத்திருக்கிறேன் ..
கேட்கலாம் இனிதாகவே இருக்கும் .....

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு தான் .. அந்த நிறத்தோடு கொஞ்சம் காதல் அதிகமே ..எனக்கு ....

14.பிடித்த மணம் ?

மழை பெய்து ஓய்ந்த பிறகு வரும் மண்ணின் வாசனை மிக பிடிக்கும் ..
பூக்களில் மல்லிகை மணத்தோடு மயக்கம் கொஞ்சம் அதிகம் எனக்கு ..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அனேகமாக எனக்கு தெரிந்தவர் அனைவருமே ..இந்த பதிவை எழுதிவிட்டனர் ..

இருவரிடமும் இனியும் அனுமதி பெறவில்லை
இருப்பினும் எனது இரண்டு தோழர்களை இந்த பதிவிட அழைக்கிறேன் ..
நண்பர் அணிமா அவர்கள் ..இவரது பதிவுகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் ..
அதிலும் இல்லாத விஷயத்தை ஊதி பெருசு படுத்துவார் பாருங்கள்
மிக அருமையாக இருக்கும்
நீங்களும் படித்து ரசிக்கலாமே இவரது படைப்புகளை ...

இரண்டாவதாக எனது அடுத்த நண்பர் சுபாஷ் அவர்களை அழைக்கிறேன் ...
கணணி பற்றிய அருமையான பல பதிவுகளை
இவரது வலை தளத்தில் பார்க்கலாம் ..
அனைத்துமே பயனுள்ளவை ..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை அழைத்த எனது தங்கையின்
அனைத்து கவிதைகளுமே எனக்கு பிடிக்கும்
நல்ல பல கவிதைகளை இவரது வலை தளத்தில் பார்க்கலாம் ..

17. பிடித்த விளையாட்டு?

கிரிகெட் மற்றும் செஸ் ..
இரண்டுக்குமே நேரம் ஒதுக்க முடிவதில்லை ...

18.கண்ணாடி அணிபவரா?
இது வரை இல்லை ...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத
நம்பும் படியான கதை அமைப்புள்ள
யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..

20.கடைசியாகப் பார்த்த படம்?
தமிழ் என்றால் அயன் ... .
வேறு மொழியில் : மலையாளத்தில் விஸ்மய தும்பத்து என்ற படம் ..

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம் , குளிர் காலம் இரண்டுமே பிடிக்கும் ..
மார்கழி அதிகாலை பொழுதுகள் மிக மிக பிடித்தவை ...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மீண்டும் வரும் நாட்கள் ( கவிதை ..)
மு . புஷ்பராஜன் எழுதியது ..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனது மடிக்கணணியில் உள்ளதை ..அடிக்கடி மாற்றுவேன்
அலுவலகத்தில் மாற்ற முடியாது ..
அப்படி மென்பொருள் இணைக்கப்பட்டது .. அங்கு ..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மெல்லிசை மிக பிடிக்கும் ..
நான் இருக்கும் இடத்தில்
பாடல் வடிவில் .. எப்போதும் இருக்கும் பின்னில் ...
மலை இடுக்கிலிருந்து வரும் நீரின் சலசல ஓசை மிக பிடிக்கும் ..
கேரளாவில் நிறைய இடங்களில் அனுபவித்திருக்கிறேன்
இந்த ஓசையை ..

தத்தி நடக்கும் சிறு குழந்தையின்
கால் கொலுசின் ஓசை மிக பிடிக்கும் ..

பிடிக்காத சப்தம் ..நிறையவே இருக்கு ...
பட்டியல் இட்டால் மிக அதிகம் வரும் ..
நகரத்தின் இரைச்சல் முதல்
தொடங்கி நீண்டுகொண்டே போகும் ... தொடராய் ...

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இப்போது இருக்கும் குவைத் தான் ..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை ..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அனைத்தையுமே ஏற்று கொள்கிறேன் ..
( நடந்து விட்ட அல்லது நடக்க போகும் ஒன்றை
அப்படியே ஏற்று கொள்வேன்
மனம் ஏற்றுகொள்ளாத போது
ஏற்படுகிற ஒரு வித உணர்ச்சிதான் துயரம்...துக்கம்...
என்பது எனது எண்ணம் ...மனம் ஏற்றுகொண்டால் சுமை கூட சுவையாகும்....)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

" நான் " தான் என நினைக்கிறேன் ...
வெளி வர பலமுறை முயன்றாலும் அடக்கியே வைத்திருக்கிறேன் ...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலை பிரதேசங்கள் மூனாறு ... மற்றும்
கேரளாவில் உள்ள வனங்கள் ...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

 மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
யோசிக்கவேண்டிய விஷயம் ... உடன் பதில் வரமாட்டேன் என்கிறதே ...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....


ப்பா ..ஒரு வழியா முடிச்சிட்டேன்
மக்கா இது நான் எழுதியது தான் ..
மண்டபத்துல யாரும் எழுதி தரலை ..
குற்றம் குறை இருந்தா அது எவ்வளவுன்னு
பார்த்திட்டு அதற்கான பல்லை மட்டும் .....


அன்புடன்
விஷ்ணு ...


உன்னைத் தேடி ...

முந்தைய கடிதங்களை
படிக்காமல் இதை படித்தால்
ஒருவேளை புரிவது கடினமாகலாம் ..
முதல் கடிதம் முதல் வரலாமே ...

கடிதம் : 1
கடிதம் : 2
கடிதம் : 3
கடிதம் : 4




கடிதம் 5
**********


இனிய நண்பர்களே
நீண்ட நாட்களாக கடிதம் போட இயலவில்லை ..

பொருத்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ..

இதற்கிடையில் நடந்த
சில விசயங்களை
உங்களிடம் சொல்லி விட வேண்டும் ..

அந்த தோழி அவளது கைபேசி எண்ணுடன்

எனக்கு பதில் அனுப்பி இருந்தாள்
என்று சொல்லி இருந்தேன்...
தானே

அடுத்து மனதில் ஆசை

அவள் எப்படி இருப்பாள் என தெரிந்துகொள்ள ..

எனவே எனது நண்பனின் எண்ணப்படி

வலைத்தளங்களில்  தேடி பாரடா என்று சொல்ல ..

வேகம் ஓடினேன்  ..


எனக்கு அந்த தோழியின்
உண்மை பெயர் கூட தெரியாது தானே ..

எனவே முதல் வேலையாக
அவள் கவிதைகளை வைத்து தேடினேன் ..

அதில் சிக்கியது அவளது ஒரு கவிதை ..
 
கவிதைகள் Community இல் ..
அதை வைத்து
அதை எழுதியவர் Profile சென்றேன் ..


மிக அதிக நண்பர்களுடன் ஒரு தோழி ..

சோகமாய் சிரித்துக்கொண்டு ..

சொந்த புகைப்படத்துடன் ...

எனவே அவள் அறிமுகம் கிடைக்க

அந்த தோழி இவள் தானா ..என உறுதி செய்ய

எனது ஒரு கவிதையை

அவளது
Testimonial க்கு அனுப்பி வைத்தேன் ..
இனி நான் இது பற்றி
எனது தோழிக்கு எழுதிய கடிதத்தை படியுங்கள் ...


கடிதம்
********
எனதினிய தோழியே நலமா ?..

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என நினைத்தேன்
இதோ தொடங்கி விட்டேன் ...

இரண்டு நாட்களுக்கு முன்
ஒரு SMS அனுப்பி இருந்தேன்
கண்டுகொண்டமாதிரியே தெரியவில்லை ..
வலை தளத்தில்  ஒரு தோழியை அறிமுகம் ஆனேன்


வாழ்க்கையில்
அடிபட்டவளா தெரியவில்லை ..

அப்படி ஒரு சோகம் முகத்தில் முத்தாராமாய் ..
ஆனால் அதிலும் சிரிக்கிறாள்
ஜீரணிக்க முடியாத சிரிப்பு
அவள் முகத்தில் ....

எனவே எனது கவிதை ஒன்றை
Testimonial ஆக
அவளுக்கு அனுப்பி வைத்தேன்
அதை அவள் முழு மனதாக இணைத்துகொண்டாள்
தனது Testimonial லில் ...
என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை
நன்றி சொல்லவும் இல்லை ..


உனக்கும் அவளுக்கும்
ஓராயிரம் ஒற்றுமைகள் ...
உண்மை சொல்வாயா ??
நீயா அது ???
உன்னை தேடி தேடி
நான் அவளில் போய் நிற்கிறேன்
எனக்கு எதுவும் புரியவில்லை ..??

சீக்கிரம் மெண்டல் ஆகி விடுவேன் என்று நினைக்கிறேன் ..


நான் அந்த தோழிக்கு எழுதிய கவிதை
இங்கு இணைக்கிறேன் உனது பார்வைக்கு ..
அவள் புகைப்படத்தில்
அவள் சிரிப்பை பார்த்த போது தோன்றிய கவிதை ..

சோகம்
*********



உன்
மனதின்
வீணையை
மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற
ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....

இனிய
பௌர்ணமி ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரினாக
சுடுகிறதோ உன்னை !!!....

உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....
நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....

பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்து கொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......
- விஷ்ணு



நீ அவள் தானா என்பதை
வேகமாய் சொல்லமாட்டாய்
என்று தெரிந்தும்
உனது பதிலை
எதிர்நோக்கி

உனதினிய தோழன்
விஷ்ணு ..


நண்பர்களே ..படித்து விட்டீர்களா ...
இந்த தோழியை தேட

அறிமுகமான புதிய தோழியின்
அந்த சோகமான சிரிப்புள்ள புகைப்படத்தை

மாற்ற வேண்டும் என நான் விண்ணப்பம் வைத்ததும்

அதை அவள் மாற்றியதும் வேறு கதை ..

அதையும் அந்த சிரிப்பை மாற்ற
நான் அவளுக்கு அனுப்பிய கடிதத்தையும்
இணைக்கிறேன் விரைவில் ..


அன்புடன்

விஷ்ணு





எனதினிய தோழியே -2

 
உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..

 
உன்னை
புல்லரிக்கவைக்க
கனவுகளின்  பூக்கூடையோடு
நான் என்றும்   காத்திருப்பேன் ...
நீ கண்ணுறங்க...
 
என்
கற்பனைகளுக்கு
எட்டாததாய்  என்றுமே
உன் கவனிப்புகள்
என்னில் ...
 
இமைகளை  மூடுகிறேன் ..
உறங்கிட அல்ல ..
எனக்கு மட்டும்
எனதான உலகத்தில்
உன்னோடு   கதைகள்
பேசி இருக்க ...
கனவுகளின்   காட்டினில்
கண்மூடி நடக்கிறேன்
கவனமாய்
கைப்பிடித்து செல்ல
கண்மணி உந்தன்
கைகள் இருப்பதால் ...
சிறு துளியாய்
தொடங்கிய
உன் நினைவுகள் 
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ  ?...
 
என் கண்களை
அடகு வைத்து விட்டேன்
உன் கனவு பெட்டகத்தில்...
மீட்டு தர
நேரில் நீ என்று வருவாய்  ? 
வானம் பார்த்து 
வறண்டு கிடந்த பாலைவனத்தில்
அன்பாக பெய்த அடைமழை நீ...
நனைந்து விட்ட உன் நினைவால்
உயிர் கொடுப்பேன்....
ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....
தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....
  
கண்களை மூடுடா...
காத்திருக்கிறேன் கனவுகளில்
  என நீ அழைப்பதால்..
 உறங்கப் போகிறேன்
  உனை உடுத்திக்கொள்ள...

எனதினிய தோழியே .......




உனக்கான 
என் கவிதையில்
உனை வர்ணிக்க
வானவில்லை 
வரச் சொன்னேன்....
அதுவோ,
 தனது நிறங்களின்
எண்ணிக்கை போதாதென
 ஒதுங்கி நிற்கிறதே?
பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
 அதனால தானோ
புரட்டிப் புரட்டி
 படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?

மெதுவாகத்தானே 
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம் 
      நடத்துவாய் என  !!!!

உன் 
நிழல்  எழுத 
முயல்கையில் 
மீண்டும் மீண்டும் 
இடறி விழுகிறேன் ...
கவனமாய் 
எத்தனை எழுதியும் 
காட்டமுடிவதில்லையே 
கனிவான 
உன் முழு மனதை ...

அன்புக்கடலில் 
நான்
 மூழ்கி எடுத்த முத்தே..
அதனால் தான்
 கோர்க்கிறேனே
  கவிதைகளாய் உனை நானே..


விடியல் எழுந்து
விரியும் வரைக்கும்...
நிலவுன் 
 நினைவுகளை
மெளனமாய் வாசிக்கிறேன்..

                                        - விஷ்ணு 

என்னோடு எப்போதும்.... தொடர் பதிவு



நண்பர்களே ..மன்னிக்கவும் ..
கடந்த சில நாட்களாக வேலை பளு காரணம்
எனது வலை தளங்களில்
எனது பதிவுகள் நினைத்தபடி போடமுடியாமல் போய் விட்டது ..


இதோ எனது வேலைகளை முடித்து வந்துவிட்டேன் உங்களோடு உறவாட ...

எனது தளபதி  Subash அவர்கள்
நல்ல ஒரு தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருந்தும்
என்னால் உடன் போட இயலாமல் போய் விட்டது ..
இதோ இந்த பதிவோடு நான் தொடங்குகிறேன்
எனது பயணத்தை ...Subash அவர்கள்
பொறுத்து கொள்வார் என்ற நம்பிக்கையில் ...



என்னோடு எப்போதும் தொடர் பதிவு
*******************************************

ஐயா பெரியோர்களே ..
நான் கணணி உபயோகித்தாலும்
அதிக மென்பொருட்களை பயன் படுத்துவதில்லை .
உள்ளவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ...

சும்மாவே கும்ம காத்திருக்காங்க ..
இதுலா லேட் ஆ வேற
வந்திருக்கேன் .. எல்லாம்
என்னோடே கஷ்டக்காலம் ..கடவுளே ..

என்கிட்டே இந்த சாப்ட்வேர் 
எதுக்குனெல்லாம் கேட்காதீங்க ..
அப்படி ரொம்ப சந்தேகம் இருந்தா
மக்களே கூகிள் இருக்கு தேடி கண்டுபிடிச்சுக்கோங்க ..
என்ன விட்ருங்க ...எனக்கு இவ்வளவு தான் தெரியும் ..


கடிதமோ இல்லை
கவிதையோ போடற மாதிரியா இது
இந்த மேட்டர் எல்லாம் பெரியவங்க போடற பதிவு ..
நம்ப கிட்ட மாட்டிட்டு ..முழிக்கிது ...

பதிவு மேட்டருக்கு வராம இதென்ன பில்ட் அப் ...
சௌன்ட் வந்திடுச்சு ..
இனியும் நான் மேட்டருக்கு போகலைன்னா ..
இப்பவே கும்ம ஆரம்பிச்சிருவாங்க ..


கீழே நான் சொல்லி இருக்கும் மென் பொருட்களே ..
நான் அதிகம் பயன் படுத்துபவை ...நண்பர்களே ...

3D Creator
Adobe Photoshop CS3
Cool Edit Pro 2.0
Roxio Project Selector
CCleaner
Adobe Reader 8.1
Azhagi - Tamil Word Processor
Paint Shop Pro 7

இவைகளன்றி ..
சாதாரணமா அனைவரும் உபயோகிக்கும்
மென் பொருட்களும் ......
இருக்கு ..அதையும் பயன்படுத்துறேன் ...

அப்பறம் மக்களே
இந்த தொடர் பதிவ எல்லாரும் போட்டு
ஒரு மாதிரி அசந்து போய் இருக்கிற நேரம் ..
நான் புதுசா வலை தள நண்பர்கள்
யாரையும் கொக்கி போடாம எல்லாரையும் மன்னிச்சு விட்டிடுறேன் ...பொழச்சு போங்கோ ...



அன்புடன்
விஷ்ணு

மாட்டிகிட்டேன் ..சினிமாவில் ( தொடர் பதிவு )





அன்பு நண்பர்களே ...

இங்க பாருங்க நம்ப நண்பர்
உருப்புடாதது_அணிமா உருப்புடாதது_அணிமா அவர்கள்
என் மேல ரொம்பவே பாசம் அதிகம் ..
இந்த தொடர் பதிவில் எனக்கும்
ஒரு படம் காட்ட சான்ஸ் குடுத்திருக்கார் ..
ரெம்ப நன்றி நண்பரே ..
இவர் எனது தலைவர் எனவும் இந்த நல்ல நேரத்தில்
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ..

( நம்ப கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்காங்க ..அசத்திருவோம் ..
மேக் அப் ..தம்பி ..அந்த பவ்டறு கொஞ்சம் நல்லா பூசு...
எங்க போட்டோ புடிக்கிரவரு ..நின்னுகிட்டா எடுக்கிறா ???..
நிம்மதியா உட்கார்ந்து எடு ...)

எனவே மக்களே ..என் பேட்டிய படிங்க


அப்ப கேள்விய ..நீங்க கேட்றீங்களா இல்லை நான் கேட்கட்டுமா ?..
ஒ.. நான் பதில் மட்டுமே சொல்லனுமா .....அப்ப கேளுங்க ...



1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


நான் சினிமா பார்த்ததெல்லாம்
நல்லா நினைவு வந்த பின்னால தாங்க ..
காரணம் இருக்குங்கோ ..அப்பா ரொம்ப கண்டிப்பானவருங்கோ ..
அழுது அடம் பிடிச்சு மொத மொதல்ல பார்த்த படம்னுனா
சிரிக்க கூடாது ..ஸ்கூல்லே இருந்து கூட்டிட்டு போனாங்கங்கோ ..

( ஓய் ..என்ன சும்மா ங்கோ ...நிறுத்திட்டேன் நிறுத்திட்டேன் ...)

பள்ளி குழந்தைகளுக்காகவே தயாரித்த படம் ..
படத்தோட பேரு மறந்திட்டேன் ..விட்டுருங்க ..
கதை ஒரு பள்ளி மாணவனின் கதை என்ற நினைவு ..
அப்போ நான் இரண்டாம் வகுப்பில் படித்த நினைவு ..அதாவது 7 வயசு ..

அந்த வயசுல..எதையும் உணரும் பக்குவம் இல்லை ..
ஆனால்..ரோட்டில ..வரிசையா ..நடந்து போனதும் ..
மஞ்சுளா டீச்சர் குச்சியோடே வந்ததும்..நல்லா நினைவு இருக்கு ..

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியா ..அரங்கில் பார்த்த படம் என்றால் ..அது குருவி ..
அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்தேன் ..குவைத்தில் சிவாஜி ..
அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன் ..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி என்று சொன்னால் ..
காக்க காக்க ..ஒரு பாட்டு பாக்கனும்னு நெனச்சி CD போட்டேன்
அப்படியே படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
( ஹி ஹி .. நம்ப ஜோ )
இங்க நாம நெனைக்கிற மாதிரி எல்லா படமும் ரிலீஸ் ஆகாது ..
CD ..மற்றும் டிவி ...நெட் ..இது தான் நமக்கு ..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பெரிசா தாக்கலை ஆனால் பிடித்த படங்களில்
7 -ஜி ரெயின்போ காலனி ...
அந்த கதை கொஞ்சம் வித்யாசமாக
தெரிந்தது எனக்கு என நினைக்கிறேன்

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒண்ணுமே இல்லை எனலாம் ...
சில நேர பொழுதுபோக்கு மட்டுமே சினிமா என்னை பொறுத்தவரை

5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

DTS வந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது ...
காரணம் காட்சிகளின் பிரமிப்புக்கு ஒலியின் முக்கியத்துவம் புரிந்தது

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது நேரம் கிடைக்கையில்
சாதாரணமாக எனக்கு நண்பர்கள் சொல்வார்கள்
நல்ல படம் ..நல்ல கதை என ..உண்மைதாங்க நம்புங்க ...

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை ஞானி இளைய ராஜா ...
இசைப்புயல் A .R ரஹ்மான் இருவரின்
இதயத்தை வருடி செல்லும் இதமான மெல்லிசை ...பாடல்கள் ...

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாள படங்கள் எப்போதாவது பார்ப்பேன் ..
கொஞ்சம் வித்யாசமானவைகள் மட்டும்
மதிலுகள்,. போன்றவை

ஆங்கிலம் பார்ப்பதுண்டு நிறையவே ..
இதில் கொஞ்சம் தாக்கியது என்றால் டைட்டானிடிக் எனலாம் ..

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


இப்ப வரை நேரடி தொடர்பில்லை
நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலை ..
அவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க
என்ன செய்ய ..நீங்களே சொல்லுங்க ..
( நாம மேம்படலாம்னா விட மாட்டங்களே நம்பல )

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க ..

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒண்ணுமே ஆகாது ...அது நல்லா தெரியும் ...
தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் ..
அடுத்த முக்கிய மந்திரி ..MLA... MP... இவங்களை எல்லாம் கண்டுபிடிக்க
ரொம்பவே கஷ்டப்படுவாங்க ...


ஏதோ என்னையும் மதித்து அழைத்த
உருப்புடாதது_அணிமா அவர்களுக்கு நன்றிகள்..
எனது சொந்த கருத்துக்களை மட்டுமே
சொல்லி இருக்கிறேன் இந்த பதிவில் ..

இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..

விரல் தூரிகையில்
ஓவியங்கள்
பல படைக்கும்
நண்பர் தமிழ்ப்பறவை


மருத்துவ துறையிலும்
எனது கவிதை துறையிலும்
காவியங்கள் பல படைக்கும்
நண்பர் தங்கராசா ஜீவராஜ்

காவல் துறையிலும்
கவிதை துறையிலும்
அரசனான எனது நண்பர்
மா. கலை அரசன்

நண்பர்களே மறக்காமல் பதிவு இட வேண்டுகிறேன் ...
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
பாக்கி எல்லாருமே இதே பதிவை போட்டு விட்டதால்
இத்துடன் நிறுத்துகிறேன் ..


அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு

நழுவிய அழைப்பு ...


நழுவிய அழைப்பு ...( Missed Call )

இனிய நண்பர்களே ...
வணக்கம் ...
மீண்டும் ..
எனது அடுத்த கடிதம்
உங்கள் விழிகள் தழுவ ...

கடந்த எனது கடிதத்தில்
எனது கைபேசி எண்ணை
அந்த தோழிக்கு கொடுத்திருந்தேன்
என்று தெரியும் தானே உங்களுக்கு ..

திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் எனது கைபேசி சிணுங்க
அந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ..
மண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..
காரணம் இருக்குங்கோ ...
வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ....
கைபேசியில் இருந்து அழைத்தாலும் ..
இதே கதி தான்
பைத்தியம் பிடிக்கிற மாதிரி .. 00 110 ..இந்த மாதிரி ..
ஏதாவது புரியாத எண்கள் வரும்
அதே எண்ணுக்கு நாம் அழைத்தாலும்
தொடர்பு கிடைக்காது ...

நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..
எனக்கு யாருமே நழுவும் அழைப்பை (Miss call)
பண்ண மாட்டாங்க ..
செய்ய கூடாதுன்னு சொல்லியே வச்சிருக்கேன் ..
அப்படி இருக்க ..எப்படிங்க ?..
நான் எண் கைபேசி எண்ணை
யாருக்குமே கொடுப்பது கிடையாது ..
இவங்களுக்கு தான் சமீபத்தில் கொடுத்திருக்கிறேன் ..
அதாங்க ஒரு மடல் போட காரணம் ..
( ஏன்டா உனக்கு லெட்டர் போட வேற விசயமே கிடைக்கலையானு நீங்க திட்டக்கூடாது ..நான் என்ன செய்ய )
முடிவு பண்ணிட்டேன் ....
அவங்களுக்கு ஒரு மடல் போடலாம் என ...
அதாங்க இந்த லெட்டர் ..
படிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன் ..


என்
இனிய தோழிக்கு
நலம் ..நலமா ?..
என்ன செய்து கொண்டு இருக்கிறாய் ?..
உன் பதில் வரும் என்ற உறுதியில்
இதோ இன்றும் தொடங்கிவிட்டேன்
உனக்கு மடல் எழுதவே ...

வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும்...
யார் யார் வீட்டில் என நீ விரிவாக எழுதிய மடல் கிடைத்தது ..
( மடல் வந்துச்சு ஆனா... வீட்ல யாரு யாரு இருக்காங்க ...அப்படின்னு எதுவும் அதுல இல்லை ..அத எப்படி அவங்க கிட்ட சொல்லறதுன்னு தெரியல .)

இப்பவும் photo gallery ...cine gallery என
வழக்கம்போல்
செய்ததையே செய்து கொண்டு
இருப்பாய் என நினைக்கிறேன் என்னைப்போல ...
என்ன புரியவில்லையா ?..
உனக்கு மறக்காமல்
தினம் ஒரு கடிதம் என எழுதுகிறேனே ..அது போல ..
எனது வேலை நன்றாகவே நடக்கிறது ...

உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும்
தயவு செய்து கடந்த வெள்ளி அன்று செய்தது போல
நழுவும் அழைப்பை எனது கைபேசிக்கு ( Mobile) செய்யாதே ..

காரணம் இங்கு குவைத்தில்...
எங்கிருந்து கால் வந்தாலும்
இன்காமிங் நம்பர் தெரியாது ..
குவைத்தில் எல்லா
தொலைபேசி சேவைகளும் ( நெட்வொர்க்)
அப்படி தான் ..

வெள்ளியன்று உனது அழைப்பு என ..
தெரியாமல்....
நீ தான் ..
ஏனென்றால் எனக்கு
நழுவும் அழைப்பு தர வேறு யாரும் இல்லை ..
காரணம் அவர்களுக்கு தெரியும்
பிரயோஜனம் இல்லை ..எனவும்
நம்பர் தெரியாது எனவும் ..
அன்று எனது வீடு,
நண்பர்கள் என பலபேரை அழைத்து பேசி
அவர்கள் இல்லை என முடிவு செய்தேன் ...

அதே போல நான்
இங்கிருந்து உன்னை அழைத்தாலும்
இதே கதி தான் உனக்கும் ..
எனது நம்பர் தெரியாது ...
எனவே என்னோடு ( தேவை எனில் )

பேச வேண்டும் என்றால் அழைக்கலாம் ...
வேறு வழி இல்லை ...சரியா ...
( இல்லை என்றால் குறுந்தகவல் தான் ( SMS) செய்ய வேண்டும்....
ரெம்ப .....Costly Friend மொனங்கறது என் காதுக்கு கேட்கிறது )

என்னடா இவ்வளவு சீரியஸ் ஆக
இப்படி ஒரு கடிதம் என பார்க்கிறாயா ..
என்ன செய்ய ..
உனக்கு எனது கைபேசி எண்ணை கொடுத்தேன் ..

உலகத்தில் எவ்வளவோ
அதிசயங்கள் நடக்கின்றன ..
அது போல உனக்கு ஒரு
மிஸ் கால் பண்ண வேண்டும் என தோன்றி விட்டாலோ ..
அதான் முன் எச்சரிக்கையாக
இந்த மடல் ..இப்போது புரிந்ததா ???..

அதிகம் எழுதிவிட்டேன் ...கை வலிக்கிறது ...
உனது பதில் ( ரெண்டு வரி அல்ல ..விரிவான ) வரும் என்ற

நம்பிக்கையில்
நாட்களை
நகர்த்தும் ....

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

என்ன படிச்சிடிங்களா ....
இந்த photogallery , cine gallery ..மேட்டர் என்னன்னா...அத தாங்க
அந்த முதல் கடிதத்தில் சொல்லி இருந்தேனே
அந்த சைட்லே
அவங்க தன் சுய தகவல் பகுதியில் ( Profile)
சொல்லி இருந்தாங்க வேலை என்ற இடத்தில்...
சுட்டுட்டம்ல அதை ..
கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..
நீண்ட பதில் ..
அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில்
சந்திக்கிறேனே உங்களை ...
நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...
அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..
அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..
அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..
மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்
விஷ்ணு

தொண்டு கட்டை ...




அன்புள்ள நண்பர்களே ...


எனது முதல் கடிதத்தில்
நான் சொல்லி இருந்தேன் ...
பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை
காரணம் சொல்கிறேன் என ..

நான் படித்தது ..
ஒரு சிறு கிராமத்தில் ...
ஒரு சிறிய பள்ளியில் ...

எனது தொடக்க கல்வி
அப்படி தான் ..தொடங்கியது ...
நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும் ..
அந்த பள்ளி ஒரு தனியார் பள்ளி ..
அங்கு ஆசிரியர்களாக ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் ...
அங்கு நானும் எனது நண்பர்களும்
செய்யாத குறும்புகளே இல்லை எனலாம் ...

அப்பள்ளியில் ஒரு வரவேற்பறை ...
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ...
அந்த வரவேற்பறையில்....
நீங்கள்.. கேள்வி பட்டிருப்பீர்களா என தெரியவில்லை ...

தொண்டு கட்டை ...
இப்படித்தான் அழைப்போம் அதனை ..
ஒரு மூலையில் அடுக்கிவைக்க பட்டிருக்கும் ..
அந்த பள்ளியில் நான்
நான்காம் வகுப்பு வரை படித்தேன் ..

ஒரு கட்டையில் ..
சாதாரணமாக அம்மி கல்லில் உள்ள அம்மி போல
ஒரு உருண்ட கட்டை.. அதில் ஒரு சங்கிலியும்
அதனோடு சேர்த்து ஒரு வளையம் பூட்டு...
இத்தியாதி ..சாதனங்கள் சேர்ந்தது தான் தொண்டு கட்டை ...

அந்த தொண்டு கட்டை எதற்கு தெரியுமா ?...
மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களை பயப்படுத்தவும்
நான்காம் வகுப்பு முதல்
தேவை என்றால் (குறும்பு அதிகமானால்)
அதை காலில் மாட்டி ..பூட்டி விடுவார்கள் ..

எங்கு வெளியில் சென்றாலும்
அந்த கட்டையை கையில் எடுத்துக்கொண்டு தான்
செல்ல வேண்டும் ..
வெளியில் நடக்கும்போது
எல்லா பசங்களும் கிண்டலும் செய்வார்கள்
தொண்டு கட்டை என ..கூவி ...

கட்டை மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு போனால் அங்கும் அடி ...
ரெம்ப கொடுமையான தண்டனை அது .
வீதி முழுவதும் தூக்கிக்கொண்டு ...
உறங்கும்போதும் கூடவே ...
நினைக்கவே பயமாக இருக்கு ..
இதில் சக மாணவர்களின் கிண்டல் ..
கட்டை போட காரணம் ..
வீதிகள் வருவோர் போவோர் எல்லாம் கேட்பார்கள் ..
பதில் சொல்ல வேண்டும் ..
அதும் உறவினர்கள் என்றால்
அவர்கள் பங்குக்கு
காரணம் தெரிந்த பின்
வீதியிலேயே ...ரெண்டு அடி தருவார்கள் ...

இது இந்த பள்ளியில் அதிக பட்ச தண்டனை ...
எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கவேண்டும்
என்பதை தலைமை ஆசிரியர் தான் தீர்மானிப்பார்..

இனி விசயத்திற்கு வருகிறேன் ...
நான் நான்காம் வகுப்பு படித்தபோது ..
எனது நெருங்கிய தோழர்கள்
ஆறுமுகம் , மயில்சாமி , அர்ஜுனன், குமார் ..

இதில் ஆறுமுகம் கொஞ்சம் குறும்பு அதிகம் ..
அப்பவே அதிக சினிமா பார்த்தவன் எங்களில் ..
அன்று வழக்கம்போல் காலையில்
நாங்கள் அனைவரும் பள்ளியில் ஆஜர்,..
அப்போது வகுப்பில்
மஞ்சுளா டீச்சர் ..

ரெம்ப நல்லவங்க ...
நல்லா பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க ...
பிரேயர் முடிந்து வகுப்பு தொடங்கி விட்டது ...
ஆறுமுகம் மும்முரமாக
ஏதோ எழுதிக்கொண்டு இருந்தான் ..
அதும் மீண்டும் மீண்டும் திருத்தி...
பாடத்தில் கவனமாக இருந்ததால்
அவன் என்ன எழுதுகிறான் என்று
நான் கவனிக்கவில்லை ..
காரணம் எனக்கு பிடித்த பாடம் ....

கொஞ்ச நேரத்தில் ..
இண்டெர்வல் விட்டார்கள்..
சரி என நாங்கள் மூன்று பேர் வெளியில் போனோம் ..
ஆறுவை காணவில்லை ...
எங்கே போனான் என தேடியும் கிடைக்கவில்லை ..

பள்ளியில் கழிவறை எல்லாம் கிடையாது ..
கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன மைதானம் வரை
நடந்து போக வேண்டும் ..
எல்லாம் முடிந்து திரும்பி வந்தால் ..
அங்கு வகுப்பில் ஒரே களோபரம் ...

ஆறுவை தலைமை ஆசிரியர்
அடித்துக்கொண்டு இருந்தார் ..
பக்கத்தில் போக பயம்...
வேறு வழி இல்லாமல் பக்கத்தில் போனபோது
எங்களுக்கும் கொஞ்சம் அடி கிடைத்தது ...

விஷயம் தெரியாமல் அடி வாங்கினேன் ...
தொண்டு கட்டை எடுக்கப்பட்டது ..
அன்று ஆறுமுகம் அழுதது
இன்றும் எனக்கு மிக நன்றாக நினைவு இருக்கிறது ...

பாவம் அவன் ...
வகுப்பில் ராஜி என ஒரு வகுப்பு தோழி
அவளுக்கு கடிதம் கொடுத்திருக்கிறான் ..
கடிதம் என்றால்..
சின்ன துண்டு பேப்பருலே
உன்னை பிடிச்சிருக்கு
என்று எழுதி கொடுத்திருக்கிறான் ...
அதை அவள்
மஞ்சுளா டீச்சருக்கு கை மாற
விஷயம் தலைமை ஆசிரியர் வரை போய்
தொண்டு கட்டை போடும் நிலைமைக்கு வந்து விட்டது ...

மூன்று நாட்கள் ரெம்ப கஷ்டப்பட்டான் ..
சில நேரம் நானும் மயிலும்( மயில் சாமி)
மாறி மாறி கட்டையை தூக்கி கொள்வோம்
அவன் பக்கத்தில் நடந்து வருவான்

ஆனால் அவன் ரெம்ப நல்லவன் ..
இதில் ..அவன் ஒரு உண்மையை மறைத்து
என்னை காப்பாற்றி விட்டான் ...
காரணம் ..லெட்டர் கொடு என
ஐடியா கொடுத்ததே நான் தான் ...
அவன் மட்டும் அன்று
நான் தான் லெட்டர் கொடுக்க சொன்னேன் என
சொல்லி இருந்தால்....
அன்று எனக்கும் தொண்டு கட்டை தான் ...

இந்த நிகழ்ச்சி மாறாத வடு போல
மனதில் பதிந்து விட்டது ..
நான் பள்ளிகள் பல மாறியும் ..
கல்லூரி படிப்பிலும்
கடிதம் கொடுக்கும் எண்ணம்
என் மனதில் உதிக்கவே இல்லை
என்பது தான் உண்மை ..
இவ்வளவு மனதில் உறுதியாக இருந்தேன்..

வருடங்கள்..பல கடந்து ..
வேலை பார்க்க தொடங்கி
கடந்த வருடம் தான்
நான் முதல் முதலாக
நான் சொன்னேனே ...
அந்த தோழிக்கு கடிதம் எழுதினேன் ..
அது நீங்கள் முன் படித்தீர்கள் தானே ..

நேரம் கிடைக்கையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து
ராஜியை பலிவாங்கிய நிகழ்வை சொல்கிறேன் ...
அடுத்த கடிதமும் எழுதவேண்டும்

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ..

அன்புடன்
விஷ்ணு ...